வாக்குச்சாவடிகள் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு:
2016 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் ஆரம்பித்துவிட்டன. மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் வருவாய்த் துறையினர் மாநிலத் தேர்தல் ஆணையத்தால் முடுக்கிவிடப்பட்டும் கண்காணிக்கப்பட்டும் வாக்குச்சாவடிகள், தேர்தல் பணியாளர்கள், வாக்காளர் பட்டியல் வெளியீடு போன்ற முன்தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டுள்ளன.
வாக்குச்சாவடிகள் உள்ள பள்ளிகள் சனி, ஞாயிறு, அரசுவிடுமுறை என இல்லாமல் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் பார்வையிடப்படலாம்.
தலைமையாசிரியர்களுக்கான சில முக்கியக் குறிப்புகள்:
1) உங்கள் செல் நம்பரை வருவாய்த் துறையினரோ மாவட்ட நிர்வாகமோ கேட்டால் கொடுங்கள்
2) வி.ஏ.ஓ, வருவாய் ஆய்வாளர், கிராம உதவியாளர் ஆகியோரின் செல் நம்பர்களை உங்கள் ஃபோனில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
3) அப்படியே உங்கள் பள்ளிக்கு உட்பட்ட காவல் நிலைய தொடர்பு எண்ணையும் பதிவு செய்துகொள்ளவும்.
4) தேர்தல் சார்பாக பள்ளிக்கு எந்த அலுவலர் வந்தாலும் வணக்கம் தெரிவித்து வரவேற்பு கொடுங்கள்
5) நீங்கள் விடுப்பிலோ பிறபணியிலோ செல்லும்போது பொறுப்பேற்கும் ஆசிரியரிடமும் இதனைத் தெரிவியுங்கள். அவ்வப்போது நடக்கும் வாக்குச்சாவடிப் பார்வை விவரங்களை PTA/ VEC தலைவர்களிடம் தகவலுக்காகத் தெரிவித்துவிடுங்கள்.
6) வாக்குச்சாவடி வகுப்பறையில் மின்வசதி, ரேம்ப் வசதி, பழுதற்ற தரை- சுவர்- கூரை- கதவு- சன்னல் போன்றவற்றை உறுதி செய்யத்தான் பார்வையிடப்படுகிறது என்பதை உணர்ந்து அவர்கள் கேட்கும் விவரங்களைச் சரியாகக் கூறுங்கள்
7) கழிப்பிட வசதியைப் பொறுத்தவரை உங்கள் பள்ளியின் நிலைப்பாடு கட்டுமானத்தின் கீழோ, எதிர்பார்ப்பின் கீழோ இருந்தால் எஸ்எஸ்ஏ மேற்பார்வையாளரையும் உ.தொ.க.அலுவலரையும் ஆலோசித்துக் கூறுங்கள்
8) விடுமுறை தினங்களில் பார்வையாளர் வந்தால் முடிந்தவரை நீங்களே (நீங்கள் பெண்ணாசிரியர் என்றால் ஒரு துணையுடன்) பள்ளியைத் திறந்து காட்டி, பார்வையாளர் போனவுடன் பள்ளியைப் பூட்டி சாவியை உங்கள் வசமே வைத்துக் கொள்வது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடமோ, அரசியல் கட்சியாளர்களிடமோ பள்ளிச் சாவியைக் கொடுக்காதீர்கள்
9) வாக்குச்சாவடியாக உள்ள வகுப்பறையில் கணினி, அச்சுப்பொறி, பீரோ போன்ற முக்கியப் பொருட்கள் இருந்தால் அவற்றை வாக்குச்சாவடி அல்லாத வகுப்பிற்கோ தலைமையாசிரியர் அறைக்கோ கொண்டு செல்ல ஆரம்பித்து விடுங்கள்
10) சத்துணவுப் பணியாளாரோ, அங்கன்வாடிப் பணியாளரோ, பிற ஆசிரியர்களோ உள்ளூரில் குடியிருந்தால் அவர்கள் விடுமுறை நாட்களில் அவ்வப்போது பள்ளியைக் கண்காணித்துக் கொள்ளுமாறு சுமூகமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment